Breaking

Kathiruppor Pattiyal Tamil Movie review

புதிய ஐடியாவாக இருந்தாலும், ஒரே இடத்தில் நகரும் கதை என்றால் அது ரொம்ப ரிஸ்க்கு தான். ஒரே லொக்கேஷனில் நகரும் படம் ரசிகர்களை ரசிக்க வைப்பது என்பது மணலில் கயிறு திரிப்பது போல தான். அப்படிப்பட்ட ஒரு படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘காத்திருப்போர் பட்டியல்’ எப்படி என்பதை பார்ப்போம்.

வேலைக்கு போகாமல் நண்பனது தயவில் வாழ்ந்துக்கொண்டு வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ சச்சின் மணி, ஹீரோயின் நந்திதா ஸ்வேதாவை காதலிக்கிறார். வேலை இல்லாத காரணத்தால் நந்திதாவின் அப்பா காதலுக்கு கருப்பு கொடி காட்ட, சச்சின் எப்படியாவது ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் அவர் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் கேப்பில், நந்திதாவுக்கு அவரது அப்பா வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை கவனிக்க, விஷயத்தை அறியும் சச்சின், தனது காதலியை சந்திக்க சென்னையில் இருந்து ரயில் மூலம் பாண்டிச்சேரிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு தவறுக்காக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

கோர்ட், பைன் என்று போனால் ஒரு நாள் ஓடிவிடும், என்று அவருடன் கைதானவர்கள் சச்சினுக்கு அட்வைஸ் சொல்ல, அதனால் ரயில்வே போலீஸ் கண்ணில் மண்ணை தூவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆக நினைப்பவர், எஸ்கேப் ஆகி தனது காதலியை கரம் பிடித்தாரா, இல்லையா என்பது தான் படத்தின் கதை.

ரயில் நிலையம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறையிலேயே நடக்கிறது. ரயில் நிலையத்தில் தவறு செய்பவர்கள் கைதாகி ஒரு அறையில் அடைக்கப்பட, அங்கே அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வது, அவர்களுக்கு தனது காதல் கதையை ஹீரோ சச்சின் சொல்லும் காட்சிகள் சில காமெடியாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் உப்பு சப்பில்லாமல் தான் இருக்கிறது.

அறிமுக ஹீரோ சச்சின் மணி, கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறார். அசத்தலான நடனம் ஆடுபவர், காதல் காட்சிகளிலும் அசத்தலாக நடித்திருக்கிறார். சச்சினை காதலிப்பதை தவிர வேறு எதையும் செய்யாத நந்திதா ஸ்வேதா, எதார்த்த அழகை தொலைத்துவிட்டு, தேவையில்லாத மேக்கப்பால் முகத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

பாடல் காட்சிகளையும், பாண்டிச்சேரி காட்சிகளையும் அழகாக காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார், நந்திதா ஸ்வேதாவை மட்டும் சில இடங்களில் அலங்கோலமாக காட்டியிருக்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசைக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், பாடல்கள் மூலம் தனது பெயரை நிலைநாட்டிவிட்டார்.

லா அண்ட் ஆர்டர், டிராபிக் போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் பயம், ரயில்வே போலீஸ் மீது இல்லையே, என்று வயித்தெரிச்சல் படும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், அதை தனது நடிப்பில் நன்றாகவே காட்டியிருக்கிறார். மக்களுக்கு ரயில்வே போலீஸ் மீது பயம் வர வேண்டும் என்பதற்காக அவர்  எடுக்கும் நடவடிக்கைகள் படத்தை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

ஹீரோவுடன் ரயில்வே போலீஸிடம் கைதாகும், செண்ட்ராயன், அப்புக்குட்டி, மயில்சாமி, அருண்ராஜ், மனோ பாலா ஆகியோரது கூட்டணி காமெடிக் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது.

படத்தின் முதல் பாதி முழுவதும் ரயில்வே போலீஸின் கைது நடவடிக்கை, ஹீரோவின் காதல் பிளாஷ்பேக் என்று படம் ரொம்ப சாதாரணமாக பயணித்தாலும், இரண்டாம் பாதியில் ஹீரோ ரயில்வே போலிஸிடம் இருந்து தப்பிக்க போடும் பிளானும், அதனை சுற்றி வரும் காட்சிகளும் சற்று சுவாரஸ்யமாக நகர்கிறது. ஹீரோ தப்பித்துவிட்டார், எல்லாம் முடிந்தது என்று நினைக்கும் போது, திடீர் ட்விஸ்டாக நந்திதா ஸ்வேதா ரயில்வே போலீசாரிடம் சிக்கிக்கொள்ள, அதனை வைத்து மீண்டும் சச்சினை ரயில்வே போலீஸ் வளைக்க, பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.

ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டாலும், புதிய ஐடியாவோடு களத்தில் இறங்கியிருக்கும் இயக்குநர் பாலய்யா டி.ராஜசேகரின் கதை சொன்ன விதத்திற்கும், காட்சிகளை நகர்த்திய விதத்திற்கும் சபாஷ் சொல்லியாக வேண்டும்.

லோக்கல் எலக்ட்ரிக் ரயில் போல, அதிக வேகமும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் செல்லாமல், ரொம்ப ஸ்மூத்தாக செல்லும் திரைக்கதை எந்த இடத்திலும் தடம் புரளாமல் இறுதியில் ரசிகர்களுக்கு நல்ல பயணத்தின் அனுபவத்தையே கொடுக்கிறது.

மொத்தத்தில், ‘காத்திருப்போர் பட்டியல்’ வித்தியாசமான ஐடியாவில் காதல் பிளஸ் காமெடியை அளவாக சேர்த்து கொடுத்து இறுதியில் ரசிகர்களிடம் அப்ளாஷ் வாங்கிவிடுகிறது.

No comments:

Powered by Blogger.